என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் போராட்டம்"
சென்னை:
தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி தேர்வை நடத்த கூடாது மீண்டும் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரி மதுரை உள்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதைதொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வரும்படி வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என போலீசார் மறுத்தனர்.
இது போன்று பொய்யான வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்புவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட இதர சட்டப்பிரிவுகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
மெரினா கடற்கரை பகுதியில் எந்த விதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவும் அமலில் உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதையொட்டி மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்..
இதையொட்டி மெரினா கடற்கரையில் சந்தேகத்துக்குரிய வகையில் கூட்டமாக திரண்டவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மாணவர்கள் போராட்டம் அறிவிப்பு காரணமாக நிலைமை சீராகும் வரை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர்.
இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.
மேலும் நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் உயர்கல்வித்துறை, செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையே பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆதரிக்கின்றனர்.
குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் ஆன்லைன் வகுப்புகளையே நடத்தி வந்தன. நேரடி வகுப்புகள் துவக்கப்படவில்லை. நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடி தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது கவலை அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் எனப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தவும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெறவும் நல்ல முடிவு எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை ஒரு கும்பல் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கக்கோரியும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியை தவறாக கையாள்வதால், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூகத்தில் இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அதிகபட்சமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆசிரியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருங்கோபத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சுமூக உறவு நிலவும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதுடன், கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கும் வகையில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மேலும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் எவ்வித பாரபட்சம் இல்லாமல் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறினார்.
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.
கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவியது. #PollachiAbuseCase
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இன்று 12 மணிக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை எனில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.
இதனால் கல்லூரி வளாகம் முன்பு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து இருந்தார்.
12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது. ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு வந்தார்.
முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.
பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு கவர்னரை சந்திக்க வந்தனர்.
அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர் அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.
மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர முடியவில்லை.
இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.
பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார் வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே சென்றது.
இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது. #PondicherryGovernor #Kiranbedi
ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வகுப்புகள் தொடங்கியதும், மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இது போல கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பல்கலைக்கழக தேர்வுகள் முன்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக நடத்தப்படும்.
ஆனால் இப்போது பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பல்கலைக்கழகம் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
இது பற்றி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
மனோன்மணியம் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளை இனி மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனக்கூறியுள்ளது.
இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதாக மாணவ-மாணவிகள் கூறியுள்ளனர். அவர்களின் போராட்டம் குறித்து பல்கலை கழக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் எடுக்கும் முடிவுகள் படியே தேர்வுகள் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்